Published Date: August 2, 2024
CATEGORY: CONSTITUENCY
மதுரை மாவட்டத்தில் 2.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்.
மதுரை ஆரப்பாளையம் திரு.வி.க மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் மற்றும் சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு சீருடை மற்றும் சைக்கிள்களை வழங்கினார். மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமை வகித்தார். கலெக்டர் சங்கீதா, கமிஷனர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் பேசியதாவது:
கல்வியும், சுகாதாரமும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து அதன் படி செயல்பட்டு வருகிறார். பொருளாதாரம், சமூக முன்னேற்றம், சமத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை திராவிட மாடல் அரசு வழிநடத்தி செல்கிறது. இப்பள்ளியில் 495 மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 1540 பள்ளிகளில் மொத்தம் 2.70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா சீருடை வழங்கப்பட்டு உள்ளது என்றார் அமைச்சர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் பாண்டி செல்வி, கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Media: Tamil Murasu